Skip to main content

Posts

Showing posts from December, 2022

போலீசார் வாகன சோதனையில் 3டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!

 திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காந்திநகரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று போலீசாரை கண்டதும் நின்றது. வாகனத்தை நிறுத்தி விட்டு அதிலிருந்த ஓட்டுநர் தப்பி ஓட்டம் பிடித்தார்.  போலீசார் அந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசி, வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்த முயன்ற ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர்: சந்திரசேகர் 

நத்தம் அருகே வீட்டில் பதுங்கிய நல்ல பாம்பு பிடிபட்டது..

  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணா நகர் பகுதியில் உள்ள முத்துக்குமார் என்பவரது வீட்டில் நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு, நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் மற்றும் சித்திரக்குமார், நவநீதகிருஷ்ணன், சேகர், மனோஜ், முத்து கண்ணன், வீரர்கள் குழுவினர் வீட்டு பின்புறம் செங்கல்கள் அடுக்கி இருந்த பகுதிகளில் பதுங்கியிருந்த 4அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. செய்தியாளர்: அரியநாயகம் 

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

 தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சார்பில் ஆலோசனைக் கூட்டம், கொளத்தூர் குமரன் நகர்  குடியிருப்போர் நன்னல சங்க கட்டிடத்தில் மாநிலத் தலைவர் மக்கள் காவலர் செய்தி ஸ்ரீதர் தலைமையில், சங்க பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாம் குறித்தும், இதில் கலந்து கொள்ள இருக்கின்ற காவல் துறை அதிகாரிகள்,  முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்களை அழைப்பது பற்றியும்,  சிறப்பாக செயல்பட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு கேடயம் வழங்குவது குறித்தும், மேலும் அடுத்த ஆண்டுக்கான மாநில மாவட்ட நிர்வாகிகள் செயல்பாடுகள் பற்றியும், உறுப்பினர்கள் சேர்க்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது..   இந்நிகழ்வில்  மாநில துணைத் தலைவர் மாலை முரசு அகமதுஅலி,  மாநில இணைச்செயலாளர் காகித பூ கார்த்திக், மாநில அமைப்பு செயலாளர் அரசு மலர் பாலமுருகன், மாநில செய்தித்தொடர்பாளர் அரசியல் அரிச்சுவடி லோகேஷ், சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தினகரன், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மதன் கோபால்,  த...

வீட்டை உடைத்த கொள்ளையர் ஏமாற்றத்தால் அதிர்ச்சி ..!

 பழனி திருநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கனகா. செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். நேற்று நள்ளிரவு இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் சிலர் உள்ளே புகுந்தனர்.  பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நகை-பணம் எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றம் அடைந்த அவர்கள் வீட்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து சென்றனர். இன்று வீட்டிற்கு திரும்பிய சந்திரசேகரன் மர்மநபர்கள் பூட்டைஉடைத்து உள்ளே நுழைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காமிராபதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இவர் தனது வீடடில் நகை-பணம் எதுவும் வைத்திருக்கவில்லை. பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையர்கள்   ஈடுபடுவது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர்: அரியநாயகம்  

திண்டுக்கல் அருகே இரவு பகலாக மணல் கொள்ளை..!

  நிலக்கோட்டை அருகேயுள்ள வைகையாற்றில் இரவுபகலாக தொடர்ந்து மணல் கொள்ளையர்களால், மணல் கொள்ளையடிக்கப்பட்டு பல ஆயிரங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாகனத்தை மறித்து ஏன் மணலை அள்ளுகிறீர்கள் என்று கேள்வி கேட்டால் பொதுமக்களை, மணல் கொள்ளையர்கள் மிரட்டி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 4 க்கு மேற்பட்டவர்கள் மணல் கொள்ளையர்களின் வாகனங்களில் சிக்கி இறந்துள்ளனர்.  மாவட்ட அதிகாரிகளும் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுவது  திண்டுக்கல் மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தற்போது 24மணி நேரமும் மணல் கொள்ளையால் ஆறு, குளம், கண்மாய்   மணல் காணாமல் போய்யுள்ளது. கொள்ளையர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர். செய்தியாளர்: அரியநாயகம் 

தடுப்பூசி போட்ட 45 ஆவது நாள் குழந்தை இறப்பு..!

  திண்டுக்கல், நல்லாம்பட்டியில் பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த விஜயகுமார் வசித்து வருகிறார். இவரது பிறந்து 45 நாளான ஆண் குழந்தைக்கு நேற்று தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை மர்மமான முறையில் ஆண் குழந்தை உயிரிழந்தது. இதனால் பெற்றோர் கொதிப்படைந்துள்ளனர். இது குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது: குழந்தைக்கு 45 ஆவது நாள் ஊசி போட்டவுடன் காய்ச்சல் ஏற்பட்டது. ஊசி போட்டதால் காய்ச்சல் வரும் என செவிலியர்கள் தெரிவித்தனர். இதை நம்பி நாங்கள் எந்த டாக்டரிடமும் அழைத்துச் செல்லாமல் இருந்தோம். இதனால் குழந்தை சோர்வடைந்து இறந்துள்ளது. எங்கள் குழந்தை இறப்புக்கு சுகாதாரத் துறை பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றனர். செய்தியாளர்: அரியநாயகம் 

கொடைக்கானல் நகர்பகுதியில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் பீதி..!

 மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். இது கோடை வாசல் தலமாக மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகள் சொர்க்கமாக விளங்குகிறது. அடர்ந்த வனப்பகுதியாக இருந்தாலும் புலிகள் எண்ணிக்கை குறைந்ததால், காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காட்டு மாடுகள் பல்கி பெருகி உள்ளதால் விளைநிலங்கள் தொடர்ந்து நாசப்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒரு மாடு குறைந்தது 2000 கிலோ இருக்கும் என்பதால் விவசாயிகளால் விரட்ட முடியாமலும், அவற்றை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். இந்த மாடுகள் அவ்வப்போது நகர் பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது சர்வ சாதாரணமாக மாடுகள் வலம் வருகின்றன. மாடுகளை பார்க்கும் பொதுமக்கள் மிரண்டு ஓடும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஹோட்டல் ஊழியர் ஒருவரை காட்டுமாடு தூக்கி துவசம் செய்தது. இந்த சம்பவத்துக்கு பின்பு, காட்டு மாடுகள் கண்டு பொதுமக்கள் மிரண்டு இன்று காலையில் உகோர்த்தேநகர், மூஞ்சிகல், சீனிவாசபுரம் உட்பட பல இடங்களில் காட்டு மாடுகள் உலா வந்தன. இதை பார்த்த பொதுமக்கள் மிரண்டு ஓடினர். செய்தியாளர்: அரியநாயகம் 

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு..!

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமம் நல்லகண்டம் ரகு என்பவரின் வீட்டு அருகில் சுமார் 8 அடி நீளம்முள்ள மலைபாம்பு இருந்தது. சென்னை நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்து நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் திருக்கோல்நாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். செய்தியாளர்: அரியநாயகம் 

புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் பஞ்சு மெத்தை கடையில் தீ விபத்து..!

 ரெட்டேரி செங்குன்றம் நெடுஞ்சாலை, கதிர்வேடு சாலை சந்திப்பு அருகே தேவராஜ், விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த அசன்பாட்சா  (வயது 40)  என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் கடையை வாடகைக்கு விட்டுள்ளார். இவ்விடத்தில் அசன்பாட்சா  சுமார் 4 வருடங்களுக்கு மேலாக பஞ்சு மெத்தை கடை வைத்து நடத்தி வருகிறார். உரிமையாளரான கணவன், மனைவி தேவராஜ் ,விஜயலட்சுமி அருகிலேயே தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாலை சுமார் 5 மணியளவில் பஞ்சு மெத்தை கடையில் இருந்து வென்புகை வருவதை கண்ட பொதுமக்கள், இதுபற்றி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே  காவல் நிலைய போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு துறை அலுவலர் பர்குனண் மற்றும் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் களத்தில் இறங்கினார்கள். ஆனாலும் பஞ்சு பொருட்களின் மீது பரவிய தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிய தொடங்கியதை தொடர்ந்து அம்பத்தூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 20 க்கும் மேற்பட்ட ...

ரயிலில் அடிபட்டு புதுப்பெண் பலி..!

 திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே நந்தினி(20). இவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது திண்டுக்கல்லிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள். நந்தினிக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் வேல்முருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்: அரியநாயகம் 

புழலில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது..!

 விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு ( வயது 31 ) லாரி ஓட்டுனராக உள்ளார். இவர் கடந்த 17ஆம் தேதி மாதவரம் செங்குன்றம் கொல்கத்தா நெடுஞ்சாலையில் ரெட்டைஏரி அருகே  லாரியை நிறுத்திவிட்டு உறங்கிவிட்டார். நள்ளிரவில் அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை எழுப்பி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் பத்தாயிரம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர். இச்சம்பவம் பற்றி லாரி ஓட்டுனர் ரமேஷ், மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபோல் கடந்த மாதம் 27 ம் தேதி அன்று, மாதவரம் ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மூன்று சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் தொடர்ந்து புழல் காவல் நிலைய பகுதியில் லாரி ஓட்டுநரை மண்டையில் கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்தாக வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் கொளத்தூர் மாவட்ட காவல் துறை ஆணையாளர் ராஜாராம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டதின் பேரில், புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் ஆலோசனையில் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ், விஜயபாஸ்கர் தலைமையில் ...

திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை..!

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட ஜீவா தெருவை சேர்ந்த தேவன் என்பவரது மகன் திவாகர் என்ற தமிழன் வயது 33. இவர் பொன்னேரி நகர திமுக இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். தனியார் நிறுவனம் ஒன்றின் குளிர்சாதனப்பெட்டிகள் சர்வீஸ் சென்டர் வைத்திருந்தார். நேற்று இரவு இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து  விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் பொன்னேரி நகர திமுகவினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்: சந்திரசேகர் 

சாக்கடை சூழப்பட்ட சாலையால் பொதுமக்கள் கடும் அவதி..!

  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள மில்லினியம் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சில குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மேலும் சாலையில் நடந்து செல்லவும் இருசக்கர வாகனத்தில் செல்லவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதும் மிகுந்த சிரமமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சாலையில் தினமும் சென்று வருவதால் பொதுமக்கள் சிலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.டெங்கு போன்ற விஷக்காய்ச்சல் பரவும் அபாயமும் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையில் கழிவுநீரை விடுபவர்கள் மீது கடும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  செய்தியாளர்: சந்திரசேகர்  

குப்பை வாகனங்கள் இல்லை.. துப்புரவு பணியாளர்கள் அவதி...!

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 38 வார்டுகள் உள்ளன. 38 வார்டுகளிலும் சேர்ந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஆங்காங்கு ரோடுகள் மற்றும் குளங்களின் ஓரங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பை கொட்டுவதற்கு தனியாக இடம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களுக்கு வாங்கிய வாகனங்களை இன்னும் வழங்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கையில் குப்பைகளை அள்ளுகின்றனர். வீதிகள் தோறும்  குப்பைகளை கையில் வாங்கி, சாக்கில் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.  வயிற்றுப் பிழைப்பிற்காக வேலைக்கு வரும் துப்புரவு பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்தில் இது செயல்படுவதாக உள்ளது. அரசு வாகனம் வாங்கி கொடுத்தும் அதை பயன்படுத்தாமல் அப்பாவி தொழிலாளர்களையே குப்பையை சுமக்க விடுகின்றனர். குப்பைகளை கையில் வாங்கி சாக்கு சுமக்கும் கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது. ஈவு இரக்கம் இல்லா நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்தியாளர்: அரியநாயகம் 

மாரி அம்மனுக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை..

 மார்கழி மாத சிறப்பு பூஜை  முன்னிட்டு, அதிகாலையில் நத்தத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மனுக்கு  இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதைப் போன்று கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில், மீனாட்சிபுரம் காளியம்மன், அசோக் நகர் பகவதி அம்மன் கோயில் ,சந்தன கருப்பு கோவில், தெலுங்கர் தெரு காளியம்மன் கோவில்களிலும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். செய்தியாளர்: அரியநாயகம் 

சாம்பவர் வடகரை சுவாமி ஐயப்பன் திருக்கோவில் - மண்டல பூஜை கொடியேற்று விழா..

  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், சாம்பவர் வடகரை பேரூராட்சியில் கடையநல்லூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய மக்களுக்கும் பாத்தியப்பட்ட ஸ்ரீ சுவாமி ஐயப்பன் திருக்கோவிலில் மார்கழி மாச மண்டல பூஜை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. திருக்கோவில் செயலாளர் ராஜசேகர் அவர்கள் தலைமையில் அனைத்து இந்து சமுதாயப் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. செய்தியாளர்: சந்திரன் 

ஈசன் படியளக்கும் திருவிழா..

திண்டுக்கல்லில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஈசன் படியளக்கும் நாள் திருவிழா நடந்தது. திண்டுக்கலில் ஸ்ரீபத்மகிரியார் அபிராமி அம்மன் மற்றும் உப தெய்வங்களுடன் அஷ்டமி சப்ரத்தில் நகர்வலம் சென்று படியளக்கும் வைபவம் நடந்தது. அப்போது கோயிலில் இருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என திருமந்திரம் பாடி எழுச்சி கொண்டனர். ஈ எறும்பு என அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளக்கும் வைபவம் தொடர்ந்து நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செய்தியாளர்: அரியநாயகம் 

ஆற்று வெள்ளத்தில் 60 அடி ஆழத்தில் தத்தளித்த பசுமாடு..

 திண்டுக்கல் தொடர் மழை காரணமாக வேடசந்தூர் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரப்பட்டி, ஆத்துப்பாலம் என்ற இடத்தில் முனியப்பன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டது. 60 அடி ஆழம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உடன் பணியாளர்கள் கயிறு மூலம் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை பொதுமக்கள் இருகரைகளில் இருந்து வேடிக்கை பார்த்து ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் நிலைய அலுவலர் அ.ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்களை பாராட்டினர். செய்தியாளர்: அரியநாயகம் 

புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்..

 திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் மையத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள், ரோந்துப் பணிகள், வாகன சோதனை குறித்து கேட்டறிந்தார்.   தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவல் நிலைய எல்லைகள் பெரியதாக உள்ள இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து வருவதாக தெரிவித்தார். பொதுமக்கள் நீண்ட தூரம் பயணித்து காவல் நிலையத்திற்கு செல்வதை தவிர்க்கும் வகையில் இன்று 3இடங்களில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படுவதாக கூறினார். ஆவடி காவல் ஆணையரக எல்லையில் உள்ள சோழவரம், மீஞ்சூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களின் எல்லைப் பகுதிகள் அதிகளவில் உள்ளதால் அவற்றை பிரித்து கூடுதல் காவல் நிலையங்கள் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், புதிய காவல் நிலையங்கள் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடும் என ஆணையர் தெரிவித்தார். ...

திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது..!

 திண்டுக்கல் வேடப்பட்டியை அடுத்த கண்ணார்பட்டி பிரிவு அருகே வீட்டில் பிரபு(30) கஞ்சா செடி வளர்த்தார். இவரை தாலுகா காவல் ஆய்வாளர் பாலாண்டி, சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 அடி நீள கஞ்சா செடியை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள். மலைப்பகுதியில் கெட்டியான மரம் செடி கொடிகளுக்கு நடுவே செடி வளர்ப்பு வியாபாரம் செய்வதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் வீட்டுக்குள்ளே ஒருவர் கஞ்சா செடி வளர்த்தார் என்பது புதுமையாகவும் புதிராகவும் உள்ளது. இது போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  செய்தியாளர்: அரியநாயகம் 

மலைக்கோட்டை மேலிருந்து விழுந்த கல்லால் கார் சேதமானது..

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை கனமழை பெய்தது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த நேரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டன. இதை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. மழை நேரத்தில் மலைக்கோட்டையின் மேல் இருந்த பாறையில் இருந்து கல்லின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.  இந்தக் கல் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்தது. காரின் கண்ணாடி உட்பட பல பகுதிகள் உடைந்து நொறுங்கின. இதை எதிர்பார்க்காத பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை வழுக்கு பாறைகளால் ஆனது. இந்தப் பாறை எப்போதும் இடிந்து விழுந்தது இல்லை. உடைந்து விழுந்தது இல்லை. முதல் முறையாக உடைந்து விழுந்து உள்ளதால் பொதுமக்கள் வியப்பாக பார்த்துச் சென்றனர். செய்தியாளர்: அரியநாயகம் 

திண்டுக்கல் அருகே தடுப்பணை கட்டாததால் வீணாகும் தண்ணீர்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது. இன்று அதிகாலை காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. சிறுமலையில் பெய்த கன மழையால் ஆங்காங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜகபட்டியில் உள்ள பெரியகுளம் நிரம்பியது. இந்த குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், செக் டேம் அமைக்காததால் தண்ணீர் அணைத்தும் வீணாகி வருகிறது. விவசாய நிலங்களை அடித்துச் செல்கிறது. பலமுறை தடுப்பணை கட்ட சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகின்றனர். உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்களும், விவசாய குடிமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர். செய்தியாளர்: அரியநாயகம் 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே 20 டன் ரேசன் அரிசி பறிமுதல்..

 குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை இயக்குநர் திரு. அபாஷ் குமார் IPS அவர்களின் உத்தரவின் படி, வெளி மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தபடுவதை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்களின் மேற்பார்வையில்,ஈரோடு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்  திருமதி .சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் திரு.கார்த்தி, திரு.இசக்கி  மற்றும் காவலர்கள் திரு.ரமேஷ் , திரு .சிவக்குமார், திரு.ரமேஷ், திரு.பத்மநாதன் ஆகிய போலீஸ் பார்டியினருடன் வெள்ளகோவில் to காங்கேயம் நெடுஞ்சாலை ஓலப்பாளையம் ஜங்சன் அருகே வாகன தணிக்கை செய்ததில் அந்த வழியாக வந்த TN 70 J 3250 என்ற டாரஷ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது மேற்படி வாகனத்தில் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கபட்டது. ஒட்டுநரிடம் விசாரித்த போது தஞ்சாவூர், கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்குமார்(31) S/o குணசேகரன் என தெரியவந்தது.  மேற்படி நபரை விசாரணை செய்த போது அதில் 20 டன்  ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேற்படி ரேசன் அரிசி எங்கிருந்து வந்தது எ...

சிறுமலையில் சந்தனக்கட்டை கடத்தியவர் கைது..!

 திண்டுக்கல், சிறுமலையில் தென்மலை அருகே கண்ணுகுட்டி பாறை பகுதியில் சந்தன மரங்களை வெட்டி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(39) என்பவரை சிறுமலை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 10கிலோ சந்தன கட்டைகள், நாட்டுத் துப்பாக்கி ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள். சிறுமலையில் சந்தன கட்டைகளை கடத்துவது தொடர்ந்து நடந்து வருவது வனத்துறையினரை வேதனையடைய செய்துள்ளது. வனப்பகுதியில் தீவிர ரோந்துக்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். செய்தியாளர்: அரியநாயகம் 

கொடைக்கானலில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் வயர்கள் அறுந்து தொங்குவதால் மின் ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். கொடைக்கானலில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேலாக காற்று வீசி வருகிறது.   பலத்த காற்றுடன் சாரல் மழையும் விடாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. நகர் மற்றும் நெடுஞ்சாலை மேல்நிலைப் பகுதிகளில் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்தாலும் தங்களை உயிரை பணயம் வைத்து மின்சார ஊழியர்கள் கொடைக்கானல் நகர் பகுதிகளில் மின் வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஏரிச்சாலை, பெருமாள் மலை ,வத்தலக்குண்டு ரோடு, டம் டம் பாறை, பண்ணைக்காடு உட்பட பல இடங்களில் மரம் முறிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலுக்கு செல்லாததால் வர்த்தக...

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிலுவை பூக்கள்

 தமிழகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக, சுற்றுலா பயணிகளின் அமைதி சொர்க்கமாக, மௌனங்கள் நேசிக்கப்பட்டு எண்ணங்கள் சிறகடிக்கும் மலர் மனம் வீசும் பகுதியாக கொடைக்கானல் உள்ளது. இங்கு பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், இயற்கை எழில் கொஞ்சும் மலராக உள்ளது சிலுவை பூக்களாகும். இந்த சிலுவை பூக்கள் டிசம்பர் மாதத்தில் பூக்க துவங்கும். இந்த பூக்கள் ஏப்ரல் வரை நீடிக்கும். டிசம்பர் மாதத்தில் கடுங்குளிர் நிலவும் நேரத்தில் சிலுவை பூக்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கிறது. கிறிஸ்துமஸ் வரவேற்று இந்த பூக்கள் புன்னகைக்கின்றன. டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பூத்துள்ள சிலுவை பூக்கள்,சிலுவை வடிவத்தில் இளஞ்சிவப்பு மற்றும் மெருன் நிறத்தில் உள்ளன. இவ்வகை பூக்கள் பூத்துக்குலுங்குவது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பிரையன்ட் பூங்காவை உருவாக்கிய ஆங்கிலேய அதிகாரி எச்.டி. பிரையண்ட்தான் சிலுவைப் பூக்களை, வெளிநாட்டில் இருந்து இங்கு கொண்டு வந்து நட்டு வைத்தார் என்று வரலாறு கூறுகிறது. கிறிஸ்துமஸ் நேரத்தில் பயன்பெறும் ...

மாணவர்களை ஆபாசமாக பேசிய ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கு பூட்டு..

 திண்டுக்கல் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளை ஆபாச வார்த்தைகள் பேசி கடுமையாக தாக்கியதாக ஜெயந்தி என்ற ஆசிரியை மீது மாணவ மாணவிகள் புகார் தெரிவித்தனர். பெற்றோர்களும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர். அதிகாரிகள் ஆசிரியை மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இன்று காலை ஒன்று கூடிய பெற்றோர்கள் ஆசிரியரை பணி நீக்கம் செய்ய கோரி பள்ளிக்கு  பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு பூட்டு போட்டதால் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர்: அரியநாயகம் 

பொன்னேரி அடுத்த சயனாவரத்தில் ஐயப்பன் திருவிளக்கு பூஜை...

  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரத்தில் ஐயப்பன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற  2ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை சயனாவரத்தில் உள்ள காளத்தீஸ்வரர் ஆலயத்தில் தொடங்கியது.அங்கு ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்குகளை கையில் ஏந்தியபடி ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் முழங்க ஊர்வலமாக சென்றனர். விளக்கு பூஜையின் போது நடைபெற்ற வான வேடிக்கை காண்போரை கண்கவர்ந்தது. இந்த திருவிளக்கு பூஜையில் மாதவரம், சயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செய்தியாளர்: சந்திரசேகர்  

திண்டுக்கல் சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று தீபத்திருவிழா..

 திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று   வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு தீபத் திருவிழா நடைபெற உள்ளது. பக்தர்கள் தங்களது திருக்கரங்களால் தீபம் ஏற்ற குடும்பத்துடன் வருமாறு அழைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வியாழக்கிழமை தோறும் இங்கு சிறப்பு பூஜையும் பஜனையும் நடைபெறும். இப்போது பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்வதற்கு தியான மண்டபம் உண்டு. இங்கு வரும் பக்தர்களுக்கு சப்பாத்தி மற்றும் சாப்பாடு வழங்கப்படுகிறது. இன்று தீபம் திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு விளக்கு மற்றும் எண்ணெய் வழங்கப்படுகிறது. செய்தியாளர்: அரியநாயகம்  

கொசு உற்பத்தி செய்யும் கிடங்காக மாறிய பொன்னேரி மின்வாரிய அலுவலகம்..

 பொன்னேரி அடுத்த  வெண்பாக்கத்தில் மின்வாரிய அலுவலகம் மற்றும் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.மேலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்த அலுவலக வாயில் முதல் கோட்ட பொறியாளர் அலுவலகம் செல்லும் வழி, உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செல்லும் வழி,மின்கட்டணம் செலுத்தும் மையம் செல்லும் வழி அனைத்து வழிகளும் சேறும் சகதியாகவும் சாக்கடையாகவும் காட்சியளிக்கிறது. நடந்து செல்லகூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி பரவி கிடப்பதால் டெங்கு, மலேரியா, காலரா என அனைத்து வியாதிகளும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் தினமும் இந்த வழியேதான் நடந்து செல்கின்றனர். இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது மின்வாரிய அலுவலகமா அல்லது கொசு உற்பத்தி மையமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இங்கு நிலவும் சுகாதார சீர்கேடால் ஏதேனும் வ...

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் 5001 தீபம் ஏற்றப்பட்டது.

  கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் முழுவதும் 5001 தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக ஏராளமான பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவிலில்  காலையிலிருந்து பணிகளில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதே சமயத்தில் கோட்டை மாரியம்மன் கோவிலில் அனைத்து பகுதிகளிலும் விளக்கு ஏற்றப்பட்டன. பரம்பரை அறங்காவலர் சுபாஷினி தலைமையிலான குழுவினர் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாத வழங்கப்பட்டது. செய்தியாளர்: அரியநாயகம் 

நிலக்கோட்டையில் மாடு திருட வந்து மாட்டிக்கொண்ட கேரள இளைஞர்...

  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட மணியக்காரன் பட்டி சாலையோரம் உள்ள சுதந்திரபாண்டி என்பவர் தோட்டத்துப்பகுதியில் கட்டிவைக்கபட்ட ஆடு, மாடுகளை இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் திருட வந்ததாகவும், அப்போது அவரை மடக்கி பிடிக்க முயன்ற விவசாயிகளை தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது, அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட கைகளப்பில் கார்கண்ணாடிகளை உடைத்து பொதுமக்கள் அச்சுருத்தி தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது,அப்போது அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் விசாரித்ததில் அவர் கேரள மாநிலம் கொள்ளம் பகுதியைச் சேர்ந்த 27-வயதுடைய முகமது பைசல் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது. மேலும், நிலக்கோட்டை பகுதியில் இதே போல கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் ஆடு, மாடு கோழிகள் மற்றும் விவசாய மோட்டார் பம்புகள் உபகரணங்கள் பல திருடு போவதாகவும், இதுகுறித்...

திண்டுக்கல்லில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவர் கைது..!

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து வாகனங்களும் பிடிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் போலீசார் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதே சமயத்தில் நகர் பகுதிகளில் ஆன் லைன் சூதாட்டம் நடப்பது குறித்து போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். லாட்டரி விற்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆன்லைனில் லாட்டரிகள் விற்பவர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் YMR.பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த விக்டர்(40) என்பவரை, நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் கைது செய்து விசாரணை செய்கிறார்கள். செய்தியாளர்: அரியநாயகம் 

கொடைக்கானல் மன்னவனூரில் குடிக்க தண்ணீர் இல்லை..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். தரைப்பகுதியில் இருந்து அதிக உயரத்தில் உள்ள இங்கு 400 க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஆண்டு மழை பெய்து ஓரளவு தண்ணீர் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ளது. ஆனால் குடிப்பதற்கு கடந்த ஆறு மாதமாக தண்ணீர் வருவதில்லை. ஒரு மாதத்தில்  10 நாட்கள் தண்ணீர் வந்தால் 20 நாட்கள் வராமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மக்களின் சிரமம் அதிகரிக்கவே குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாததால்  கிராம மக்கள் இன்று மன்னவனூரில் ரோடு மறியல் செய்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குடிநீர் வழங்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். நீர் நிலைத் தொட்டிகளில் தண்ணீர் போதுமான அளவு இருந்தும், தண்ணீர் எடுத்து ஊராட்சி நிர்வாகம் விநியோகம் செய்ய மறுக்கிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகத்திற்கு செல்வர்கள் பாதிக்கப்படுகின...

மாதவரம் சாலை விபத்தில் வங்கி மேலாளர் உயிரிழப்பு..!

 மாதவரம் அடுத்த விளாங்காடுபாக்கம் நியூ ஸ்டார் சிட்டி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விவேக் சுகுமார் (வயது 41). இவர் சென்னை ஆர்.கே சாலையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் தனது பணியை முடித்துவிட்டு ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். மாதவரம் சின்ன ரவுண்டானா மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே வந்தபோது  தனது 4 வயது  மகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அதே திசையில் இவருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி இவரின் மீது  மோதியதில் தூக்கி எறியப்பட்டார். இதில் அவரது தலை, இடுப்பு பகுதிகளும் கை, கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் அக்பர் பாஷா, தலைமை காவலர் சீனிவாசன் ஆகியோர் அவரை காப்பாற்ற உடனே  108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில...

மாதவரம் அருகே எல்லையம்மன் கோயிலை அறநிலைத்துறையினர் எடுக்க எதிர்ப்பு..!

 சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை மஞ்சம்பாக்கத்தில் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல தலைமுறைகளாக 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாமி கும்பிட்டு வருகின்றனர். இந்த கோயிலை கிராம நிர்வாகித்தனர் நிர்வகித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறையினர் வந்து, இந்த கோயிலை இந்து அறநிலைத்துறையிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதை எதிர்த்து பொதுமக்கள் அப்போது சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது நடவடிக்கை கைவிடப்பட்டது, இந்த நிலையில் நேற்று இந்து அறநிலைத்துறையினர் கோயில் வாசலில் அறநிலையத்துறையினரிடம்  கோயிலை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டினர்.  இது பொதுமக்களிடையே காட்டுத்தீபோல் பரவியது. இதையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட கோயில் நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது. பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அனைவரும் கலைந்து செ...

செங்குன்றத்தில் 100 கிலோ மாவா, ஜர்தா சிக்கியது..

செங்குன்றம் அடுத்த கிராண்ட் லைன் செல்வ விநாயகர் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஜர்தா, மாவா போன்ற போதை தரும் பாக்குகளை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, செங்குன்றம் காவல் ஆய்வாளர் ரமேஷுக்கு ரகசிய தகவல் வந்ததின்தின்படி , அங்கு விரைந்த ஆய்வாளர் ரமேஷ், கிருஷ்ணா, மகேஷ், மோகன் கிருஷ்ணமூர்த்தி, மருதுபாண்டியர், ராஜா, ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தெருவில் உள்ள வீட்டை சோதனை செய்தபோது அங்கு 100 கிலோ ஜர்தாவையும் புகையிலை பொருட்களை அரைக்கும் நான்கு கிரைண்டர்கள், மிக்ஸி உட்பட பொருட்ககளை பறிமுதல் செய்து, அங்கிருந்த லோகேஷ் (வயது 24) விஜய் பகதூர் ( வயது 24)  ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் இந்த போதை பொருட்களை வடமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து அவற்றை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் இவர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். செய்தியாளர்: அகமது அலி