விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு ( வயது 31 ) லாரி ஓட்டுனராக உள்ளார். இவர் கடந்த 17ஆம் தேதி மாதவரம் செங்குன்றம் கொல்கத்தா நெடுஞ்சாலையில் ரெட்டைஏரி அருகே லாரியை நிறுத்திவிட்டு உறங்கிவிட்டார். நள்ளிரவில் அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை எழுப்பி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் பத்தாயிரம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.
இச்சம்பவம் பற்றி லாரி ஓட்டுனர் ரமேஷ், மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபோல் கடந்த மாதம் 27 ம் தேதி அன்று, மாதவரம் ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மூன்று சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் தொடர்ந்து புழல் காவல் நிலைய பகுதியில் லாரி ஓட்டுநரை மண்டையில் கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்தாக வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் கொளத்தூர் மாவட்ட காவல் துறை ஆணையாளர் ராஜாராம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டதின் பேரில், புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் ஆலோசனையில் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ், விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு இரவு பகலாக குற்றவாளியை தேடி வந்த நிலையில், தனிப்படை போலீசார் சம்பவம் நடத்த இடங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பகுதியைச் சேர்ந்த மதன் என்ற லொட்டை மதன் ( வயது 22 ) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் புழல் கேம்ப் பகுதியில் மற்றொரு சம்பவத்தில் ஈடுபட்ட திருவெற்றியூரை சேர்ந்த ராசையா ( வயது 27 ) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் இவர்கள் இருவரும் இதுபோல் வழிப்பறியில் ஈடுபட்டு பலரிடம் செல்போன், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்பவர்கள் என தெரியவந்தது. பின்னர் இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றையும் ஒன்றரை சவரன் தங்க நகை, ஒரு செல்போன், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.
மேலும் மதன்( எ) லொட்டைமதன் மீது சென்னை அயனாவரம், புளியந்தோப்பு ,மாதவரம் ,புழல் மற்றும் பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை பிடித்த தனிப்படை போலீசாரை காவல்துறை மேலதிகாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment