திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். தரைப்பகுதியில் இருந்து அதிக உயரத்தில் உள்ள இங்கு 400 க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஆண்டு மழை பெய்து ஓரளவு தண்ணீர் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ளது. ஆனால் குடிப்பதற்கு கடந்த ஆறு மாதமாக தண்ணீர் வருவதில்லை. ஒரு மாதத்தில் 10 நாட்கள் தண்ணீர் வந்தால் 20 நாட்கள் வராமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மக்களின் சிரமம் அதிகரிக்கவே குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாததால் கிராம மக்கள் இன்று மன்னவனூரில் ரோடு மறியல் செய்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குடிநீர் வழங்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்.
நீர் நிலைத் தொட்டிகளில் தண்ணீர் போதுமான அளவு இருந்தும், தண்ணீர் எடுத்து ஊராட்சி நிர்வாகம் விநியோகம் செய்ய மறுக்கிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகத்திற்கு செல்வர்கள் பாதிக்கப்படுகின்றனர். குடிநீர் கிடைக்காமல் பல கிலோமீட்டர் வாகனங்களில் சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. சுத்தமில்லாத நீரை குடிப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காவிட்டால் தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment