Skip to main content

கொசு உற்பத்தி செய்யும் கிடங்காக மாறிய பொன்னேரி மின்வாரிய அலுவலகம்..

 பொன்னேரி அடுத்த  வெண்பாக்கத்தில் மின்வாரிய அலுவலகம் மற்றும் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.மேலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.



இந்த அலுவலக வாயில் முதல் கோட்ட பொறியாளர் அலுவலகம் செல்லும் வழி, உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செல்லும் வழி,மின்கட்டணம் செலுத்தும் மையம் செல்லும் வழி அனைத்து வழிகளும் சேறும் சகதியாகவும் சாக்கடையாகவும் காட்சியளிக்கிறது.

நடந்து செல்லகூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி பரவி கிடப்பதால் டெங்கு, மலேரியா, காலரா என அனைத்து வியாதிகளும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் தினமும் இந்த வழியேதான் நடந்து செல்கின்றனர். இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது மின்வாரிய அலுவலகமா அல்லது கொசு உற்பத்தி மையமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இங்கு நிலவும் சுகாதார சீர்கேடால் ஏதேனும் விபரீதம் நிகழும் முன்னர், போர்க்கால அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் செயல்பட்டு நகராட்சி நிர்வாகம் மூலமாக விரைந்து சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


செய்தியாளர்: சந்திரசேகர் 


Comments