திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் மையத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள், ரோந்துப் பணிகள், வாகன சோதனை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவல் நிலைய எல்லைகள் பெரியதாக உள்ள இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து வருவதாக தெரிவித்தார். பொதுமக்கள் நீண்ட தூரம் பயணித்து காவல் நிலையத்திற்கு செல்வதை தவிர்க்கும் வகையில் இன்று 3இடங்களில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படுவதாக கூறினார். ஆவடி காவல் ஆணையரக எல்லையில் உள்ள சோழவரம், மீஞ்சூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களின் எல்லைப் பகுதிகள் அதிகளவில் உள்ளதால் அவற்றை பிரித்து கூடுதல் காவல் நிலையங்கள் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், புதிய காவல் நிலையங்கள் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடும் என ஆணையர் தெரிவித்தார்.
போதையில்லா தமிழ்நாடு என்ற அடிப்படையில் தொடர்ந்து கஞ்சா, குட்கா கடத்துவதை தடுக்கும் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் ஆணையர் அப்போது தெரிவித்தார். இந்நிகழ்வில் துணை ஆணையர் மணிவண்ணன், உதவி ஆணையர் முருகேசன், காவல் ஆய்வாளர்கள் ஜெகநாதன், ரமேஷ் மற்றும் காவல்துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment