திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் வயர்கள் அறுந்து தொங்குவதால் மின் ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். கொடைக்கானலில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேலாக காற்று வீசி வருகிறது.
பலத்த காற்றுடன் சாரல் மழையும் விடாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. நகர் மற்றும் நெடுஞ்சாலை மேல்நிலைப் பகுதிகளில் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்தாலும் தங்களை உயிரை பணயம் வைத்து மின்சார ஊழியர்கள் கொடைக்கானல் நகர் பகுதிகளில் மின் வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏரிச்சாலை, பெருமாள் மலை ,வத்தலக்குண்டு ரோடு, டம் டம் பாறை, பண்ணைக்காடு உட்பட பல இடங்களில் மரம் முறிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலுக்கு செல்லாததால் வர்த்தக நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேகமூட்டங்களின் அணிவகுப்பு காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.
செய்தியாளர்: அரியநாயகம்


Comments
Post a Comment