Skip to main content

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிலுவை பூக்கள்

 தமிழகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக, சுற்றுலா பயணிகளின் அமைதி சொர்க்கமாக, மௌனங்கள் நேசிக்கப்பட்டு எண்ணங்கள் சிறகடிக்கும் மலர் மனம் வீசும் பகுதியாக கொடைக்கானல் உள்ளது. இங்கு பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், இயற்கை எழில் கொஞ்சும் மலராக உள்ளது சிலுவை பூக்களாகும். இந்த சிலுவை பூக்கள் டிசம்பர் மாதத்தில் பூக்க துவங்கும். இந்த பூக்கள் ஏப்ரல் வரை நீடிக்கும்.



டிசம்பர் மாதத்தில் கடுங்குளிர் நிலவும் நேரத்தில் சிலுவை பூக்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கிறது. கிறிஸ்துமஸ் வரவேற்று இந்த பூக்கள் புன்னகைக்கின்றன. டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பூத்துள்ள சிலுவை பூக்கள்,சிலுவை வடிவத்தில் இளஞ்சிவப்பு மற்றும் மெருன் நிறத்தில் உள்ளன. இவ்வகை பூக்கள் பூத்துக்குலுங்குவது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பிரையன்ட் பூங்காவை உருவாக்கிய ஆங்கிலேய அதிகாரி எச்.டி. பிரையண்ட்தான் சிலுவைப் பூக்களை, வெளிநாட்டில் இருந்து இங்கு கொண்டு வந்து நட்டு வைத்தார் என்று வரலாறு கூறுகிறது. கிறிஸ்துமஸ் நேரத்தில் பயன்பெறும் என்பதற்காகவே அவர் இந்த பூவை கொண்டு வந்தார் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் வரும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் கோடை விழா களை கட்டும். இதற்காக டேலியா உட்பட பல வண்ணப் பூக்களை நாங்கள் நட்டு வந்தோம். தற்போது சுற்றுலாப் பயணிகளை மயக்கும் சிலுவை பூக்கள் பூத்துக் குலுங்குவது பயணிகளுக்குச் சொல்ல முடியாது இன்பமாக உள்ளது. மேலும், தற்போது மேகமூட்டம் சூழ கொடைக்கானல் ரம்மியமாக காட்சி தருவதால் பயணிகள் படையெடுத்துள்ளனர், என்றனர்.


செய்தியாளர்: அரியநாயகம் 


Comments