பூந்தமல்லியில் உள்ள மிகப் பழமையான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயிலின் உப கோயிலான ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில் பூந்தமல்லியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்தக் கோயிலின் ஆஞ்சநேயர் வியாசராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 21ஆம் தேதி வேத ப்ரபந்த பாராயணத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 22ஆம் தேதி யாகசாலையில் கும்ப திருவாராதனம், ஹோமம், அஷ்டபந்தனம், நவகலச பூஜை, பூர்ணாஹூதி, தீர்த்த பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று யாகசாலை கும்பாராதனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கும்பங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், கோயில் மூலவர் வீர ஆஞ்சநேயர் விமானத்தில் உள்ள கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளாக கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாபு, அறக்கட்டளைகள் வெங்கடேசன், கோபிநாத், செயல் அலுவலர் லதா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பட்டாச்சாரியார்கள் வெங்கட்ரமணன், கஸ்தூரி ரங்கன், திருவிக்ரமன் ஆகியோர் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சா.மு. நாசர், பூந்தமல்லி கிருஷ்ணசாமி எம்எல்ஏ, நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய செயலாளர் கமலேஷ், நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர் மன்ற உறுப்பினர்கள் கவிதா சுரேஷ், தீபா யுவராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வினோத்

Comments
Post a Comment