Skip to main content

பூந்தமல்லியில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்.

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியில் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. பூந்தமல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், நகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது.



பூந்தமல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சில இடங்களில், நாய் கடித்த சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் நகராட்சி பணியாளர்களுடன் சென்று இந்த பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் கூறியதாவது:

நகராட்சி பகுதியில் ஆதரவற்ற தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதும், முதியவர்கள் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.ப்ளூ கிராஸ் அமைப்புடன் நகராட்சி நிர்வாகம் இணைந்து தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பு போடுவதற்காக நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு பகுதியில் 52 நாய்கள் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. அடுத்தடுத்து அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி நடைபெறும். நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடமும் புகார் கொடுக்கலாம். தெருநாய்களை பிடிக்கும் பணிக்கு நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கூறினார்

செய்தியாளர் வினோத்

Comments