Skip to main content

காமென்வெல்த் யோகாசன போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவர்கள் சாதனை

கும்மிடிப்பூண்டி,ஜூன்.3. இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்ற காமென்வெல்த் யோகாசன போட்டியில், இந்திய அணியில் இடம் பெற்ற கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மைய மாணவர்கள், 11 தங்கம் வென்று சாதனை படைத்தனர்.

இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி தீவில், அண்மையில் காமென்வெல்த் நாடுகள் அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன. காமென்வெல்த் யோகாசன விளையாட்டு சம்மேளனம் நடத்திய இந்த யோகா போட்டியில், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட, 12 நாடுகளில், இருந்து 250 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

இதில் இந்திய அணி சார்பில் 32 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 32 பேர் கொண்ட இந்திய அணியில், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா மைய மாணவர்கள், 11 பேர், பயிற்சியாளர் சந்தியா தலைமையில் இடம் பெற்றிருந்தனர். பின் வயது வாரியாக பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி மாணவர்கள், 11 பேரும், அவரவர் பிரிவில் தங்கம் வென்று முதல் இடங்களை பிடித்தனர். 

காமென்வெல்த் போட்டியில் பங்கேற்ற அனைவரும் தங்கம் வென்று சாதனைபடைத்த மாணவர்கள் நாடு திரும்பிய நிலையில், கும்மிடிப்பூண்டியில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், சாதனை மாணவர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து வரவேற்றார். மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பேண்டு வாத்தியம் முழங்க, கும்மிடிப்பூண்டி மக்கள் சார்பில், மாணவர்கள் அனைவரும், பஜார் வீதி வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று உற்சாகப்படுத்தினர். 

பின்னர் யோகா மையத்தில் நடந்த பாராட்டு விழாவில், ஏராளமானோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.

செய்தியாளர் பிரான்சிஸ்

Comments