Skip to main content

உலகத்தின் தமிழ் முகமாகத் தமிழ்ப்பல்கலைக் கழகம் திகழ்கிறது.! தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா. சந்திரசேகரன் பேச்சு..

உலகமொழியாக விளங்கும் தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்தின் தமிழ்முகமாகத் திகழத்தொடங்கி இருப்பதாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இரா. சந்திரசேகரன் தெரிவித்தார். இப்புத்தொளிப்பயிற்சியின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சான்றிதழ் வழங்கியதோடு, தனது சிறப்புரையில் தமிழ் இலக்கிய இலக்கணம் தொடர்பான புத்தொளிப்பயிற்சிகளைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் நிகழ்த்துவதற்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், “தமிழ்ச் செம்மொழி இலக்கிய இலக்கண நூல்களின் மொழிபெயர்ப்புகள்” என்னும் பொருண்மையில் புத்தொளிப் பயிற்சியினை  கடந்த 19.8.2024 முதல் 4.9.2024 (பதினான்கு நாட்கள்) நடத்தியது. தமிழகத்தின் கல்லூரி மற்றும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்து 33 பேராசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்பாளராகப் பங்கேற்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், அரபு, உருது, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சங்க இலக்கியம் – இலக்கணம் தொடர்பான உரைகளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  துறைசார்ந்த ஆளுமைகள் வழங்கினர்.இந்நிகழ்வில் தலைமையுரை வழங்கிய தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் பேசுகையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் புத்தொளிப் பயிற்சிகள் எதிர்காலத்தில் மேலும் தொடரும் என்று தெரிவித்தார். 

சங்க இலக்கியம் – இலக்கணம் தொடர்பான ஆய்வுரைகள் நடத்தப்படும்போது நம் மொழியின் செவ்வியல் தன்மை மற்றும் மொழிவளம் முழுமையாக வெளிப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் முனைவர் பா.ராஜேஷ் புத்தொளிப்பயிற்சி குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் கருத்துரை வழங்கினார். நிகழ்விற்கு வளர்தமிழ்ப் புலமுதன்மையர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். இப்புத்தொளிப் பயிற்சிப் பயிலரங்கம் குறித்த பின்னூட்டங்களைப் பங்கேற்ற பேராசிரியர்கள் வழங்கினர். நிகழ்வின் நிறைவில் மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.ராஜேஷ்  நன்றியுரை வழங்கினார்.


செய்தியாளர் வேங்கை குணா 

Comments