தமிழக அரசு சார்பில், பல்வேறு மாவட்டங்களில், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட நசரத்பேட்டை, அகரம் மேல், வரதராஜபுரம், மேப்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் நசரத்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை ஜெயக்குமார் தலைமை தாங்கினார் .
பூந்தமல்லி ஒன்றிய திமுக செயலாளர் ப.ச.கமலேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் திவ்யா பொன்முருகன், கலையரசன், ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்ட முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவ துறை, மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை, வீட்டு வசதி துறை, காவல்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கிருஷ்ணசாமி எம்எல்ஏ அதிகாரியிடம் வலியுறுத்தினார். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வினோத்

Comments
Post a Comment