தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மீண்டும் போட்டியிட்டு 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவீனா ரூத் ஜோன் ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே, வாக்களித்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று (15/07/2024) விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிக்குச்சாலையில் தொடங்கி வேடநத்தம், குளத்தூர், வைப்பார், வேம்பார், சூரங்குடி, அரியநாயகபுரம், விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவ நாயக்கன்பட்டி, புதூர், சிவலார்பட்டியில் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.கனிமொழி எம்.பி பேசியது: மக்களவைப் பிரதிநிதியாக பணியாற்றக்கூடிய வாய்ப்பை மீண்டும் எனக்கு வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.100 நாள் வேலை என்பது உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. தேர்தல் நேரத்தில் நம்முடைய முதலமைச்சர் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி தருகிறேன் என்று உறுதி அளித்தார். அதேபோல காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வந்தவுடன் 400 ரூபாய் சம்பளம் என்று வாக்குறுதி அளித்து இருந்தார்கள். நீங்கள் எல்லோரும் ஓட்டுப் போட்டு விட்டீர்கள். ஆனால் மற்ற மாநிலங்களில் ஓட்டுப் போடவில்லை. அதனால், மீண்டும் ஒன்றியத்தில் பாஜக ஆட்சி தான் வந்துவிட்டது.இந்த 100 நாள் வேலை திட்டம் என்பது திமுகவும் காங்கிரசும் ஒன்றியத்தில் ஆட்சியிலிருந்தபோது கிராமப்புற மக்களுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம். நாங்கள் ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்குத் தொகை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்தியா முழுவதும் யாருக்கும் சம்பளம் கொடுப்பதில்லை என்று பேசினார்.
செய்தியாளர் ஆ. ரவி

Comments
Post a Comment