தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” செயலாக்கம் செய்திடும் பொருட்டு முதற்கட்டமாக முன்னோடி கள ஆய்வுமேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நிலை அலுவலர்களுக்கான புாிந்துணர்வு பயிற்சிக் கூட்டம் கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் தெரிவிக்கையில் தமிழ்நாட்டில் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் இத்திட்டம் செயலாக்கம் செய்திடும் பொருட்டு முதற்கட்டமாக முன்னோடி கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வகையில் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவகளை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, அனைத்துத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து முதற்கட்டமாக முன்னோடிகள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சமீபத்தியதனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின் படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவிகிதம் மிககுறைவாக அதாவது 2.2 சதவிகிதம் மட்டுமே என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் ஐந்து இலட்சம் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து வழங்கி விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.
ஆதரவற்றோர் தனித்து வாழும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ளதரவுகள், களஆய்வுகள் மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும் இப்புதிய திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். மேலும் இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு மாவட்ட நிலை அலுவலர்களுக்கான ஒருநாள் புரிந்துணர்வு பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, திட்ட இயக்குநர் மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அ. ரவி.

Comments
Post a Comment