தஞ்சை மாநகரம் மற்றும்"ழ பதிப்பகம் ஒருங்கிணைத்த நூல் வெளியீட்டுவிழா,தஞ்சை பெசன்ட் அரங்கில்,நடைபெற்றது.இந்த நிகழ்வில்,தஞ்சை மாநகரத்தின் பொருளாளர், ஜோ.வியானி விஷ்வா,கல்லூரி மாணவி,ம. வைதீஸ்வரி அனைவரையும் முறையாக வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். செவிலியர்தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவிகள் இலக்கியா,இனியா,இருவரும் நல்லதொரு பாடலைப் பாடினார்கள். எழுத்தாளர் குறித்து மாநகரச் செயலாளர் முனைவர்,சங்கீதா சரவணன், அறிமுகம் செய்தார். திரைப்பட இயக்குனர், விஜய். மகேந்திரனின் "தலைமுடியும் தலையெழுத்தும்” சிறுகதைத் தொகுப்பினை மாநகரத் தலைவர் எழுத்தாளர், அகிலா கிருஷ்ணமூர்த்தி வெளியிட, மாவட்டச் செயலாளர் முனைவர் ச.அய்யாறு புகழேந்தி,திரைப்பட இயக்குநர் ராசி.மணிவாசகன்,மாநில செயற்குழு உறுப்பினர் எழுச்சிக் கவிஞர் கோ.கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தஞ்சை மாநகரத்தின் சார்பில்,தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர்,மரு. பா.கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளருக்கு சிறப்பு செய்தார்.
திரை இயக்குநர் ராசி. மணிவாசகன் அவர்களின் வாழ்த்துரை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது. ஒரு நல்ல கதை இந்தச் சமூகத்திற்கு எப்படியான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதை உதாரணத்துடன் விளக்கினார்கள். இதன தொடர்ந்து விஜய் மகேந்திரன் இயக்கவிருக்கும் “நரகம்” படத்திற்கும் வாழ்த்துகளைக் கூறினார். அடுத்ததாக,"ழ பதிப்பகத்தினை" தமிழ் மொழியின் சிறப்புகளோடு ஒப்பிட்டு வாழ்த்தியதோடு, படைப்பிலக்கியத்தின் சிறப்பினை முனைவர், ச.புகழேந்தி எடுத்துக்கூறினார். கிடைத்த குறைவான நேரத்தில் சிறுகதைத் தொகுப்பின் மிக நுட்பமான உள்ளீடுகளை, சமகால சமூகக் கற்பிதங்களோடு, சமூகத் தேவைகளோடு பொருத்திப்பார்த்து மிகச் சிறப்பான அறிமுகத்தை, ஸ்ரீ மணிமேகலை பரத், மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக திட்ட மேலாண்மை அலுவலர் முனைவர், ச.சந்திரசேகர், இருவரும் முன்வைத்தார்கள். கதைகளோடு சேர்ந்து நம்மை பயணப்பட வைக்கிற அற்புதமான உத்தி அவர்களிடம் இருந்தது.
திடீர் வரவாக ஆச்சரியப்பட வைத்தவர் துப்பாக்கிக் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள். ரஷ்ய ,பிரெஞ்ச், தமிழ் படைப்புகளின் மொழிக் கூறுகளோடு காவிரி எழுத்தாளர்களின் சிறப்பம்சங்களையும் தனக்கே உரித்தான கம்பீரக் குரலில் வாழ்த்திச் சென்றார். சிறப்பு அழைப்பாளர்களுக்கு பயனாடைகளும், புத்தகங்களும், வழங்கி சிறப்பிக்கப்பட்டது. எழுத்தாளர் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை வழங்கினார்.இந்தச் சமூகத்தில் யாரும் சொல்லத்தயக்குகின்ற, மறைக்கப்பட்ட, துணிச்சலான, பெண்களுக்கான, கதைக் களத்தை இந்தத் தொ..Sகுப்பு பேசுகிறது என்றார்.
எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஏற்புரை வழங்கினார். கதைக் களம் மற்றும் கதை மாந்தர்கள் உருவான விதம், சினிமாவுக்கும் இலக்கியத்திற்குமான உறவுநிலை, சிறுகதைக்கும், திரைக்கதைக்குமான இயங்குதளம் இவைகளோடு தொகுப்பு உருவான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.எண்ணற்ற இலக்கிய ஆர்வலர்களும் திரைக் கலைஞர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அத்தனை பேருக்கும் முறையாக நன்றி தெரிவிக்கப்பட்டு குழுப் புகைப்படத்தோடு விழா நிறைவடைந்தது.இசையோடு தொடங்கி, பதிவுகளை நேர்த்தியான புகைப்படங்களாக எடுப்பதோடு, எப்போதும் தஞ்சை மாநகரத்திற்கு பக்க பலமாக விளங்கும் பாடகர் இந்துமணி மற்றும் மருத்துவர் பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment