சோழவரம் ஒன்றியம் பெருங்காவூர் ஊராட்சி மதுரா மேட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தின் 3-ம் ஆண்டு தீமிதி திருவிழா கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கணபதி ஹோமம்,கொடிஏற்றுதல், காப்புகட்டுதல், கரகம் எடுத்தல், வாடைபொங்கல் வைத்தல் மற்றும் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல், கும்பப்படையல் பூஜை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காப்புகட்டிய பக்தர்கள் தீகுண்டத்தில் இறங்கி திரு நடனம் புரிந்து தங்களின் நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்தினர்.
இத்திருவிழாவிற்கு பெருங்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்வீட்டிகோபி, துணைத்தலைவர் சுகாசினி சரவணன் மற்றும் ஆலய நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாள வானவேடிக்கைவுடன் தெரு வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment