பள்ளி மாணவர்களை போன்றே சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயிலும் வகையில் சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனித்தேர்வர்களாக பொது தேர்வுகளை எழுத சிறைச்சாலைகளுக்குள் பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிறைவாசிகள் தேர்வெழுதி வருகின்றனர்.
புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக 44 கைதிகள் 10ம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 8பேர் தேர்வெழுதாமல் 36பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில் தேர்வெழுதிய 36 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புழல் தண்டனை சிறையில் தேர்வெழுதிய 19ஆண் கைதிகளும், புழல் விசாரணை சிறையில் தேர்வெழுதிய 12ஆண் கைதிகளும், புழல் மகளிர் சிறையில் தேர்வெழுதிய 5பெண் கைதிகள் என 36 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்தமாக புழல் சிறையில் தேர்வெழுதியதில் 100% தேர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. சிறைச்சாலையில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment