தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 417 வாக்குச்சாவடி மையங்கள்,அதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள்,விவிபேட் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகாலட்சுமி நகர்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ராயர்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள், மற்றும் தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதிகள், சுகாதார வசதி, மின்சார வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முத்திரைகள், பெயர் பலகை, பென்சில், பேனா,பேப்பர், இங்க் உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், பல்லடம் தாசில்தார் ஜீவா, உதவி தாசில்தார்கள் சுப்பிரமணியம், சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் சரவணகுமார்

Comments
Post a Comment