கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான, காட்டன் ரீலிங் தொழிற்சாலையால் சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுவதால், தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளித்துள்ளனர்.
இது குறித்து மனுதாரர்கள் ஜீவானந்தம் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் கூறும் போது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகில் உள்ள குருடம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கதவு எண் 31, பாம்பே நகர் என்ற இடத்தில், ஸ்ரீ குமரன் டெக்ஸ் என்ற பெயரில் காட்டன் ரீலிங் தொழிற்சாலை கடந்த 9 மாத காலமாக இயங்கி வருகிறது.
இந்த இடம் பாம்பே நகர், பாரதி நகர், கல்யாணசுந்தரம் நகர் ஆகிய பகுதிகள் அடங்கிய பகுதியாகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்ரீ குமரன் டெக்ஸ்ட் என்ற தொழிற்சாலை அந்த பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து காட்டன் தூசு அதிக அளவில் வெளியேறுகிறது. அதேபோல தொழிற்சாலை இயங்கும்போது பெரிய அளவில் சத்தம் ஏற்படுகிறது. அப்பகுதியில் குடியிருந்து வருவோர் மிகப் பெரிய அளவிலான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. குழந்தைகள் படிக்க முடியவில்லை. இதுகுறித்து முதல்வர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிற்கு புகார் அளித்து, அந்த புகாரின் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்படி தொழிற்சாலையை மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், குருடம்பாளையம் பஞ்சாயத்து மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாத்து, பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்தி கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.
செய்தியாளர் பட்டு ராஜா

Comments
Post a Comment