திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மலைப்பகுதி கிராமமான லிங்கவாடி மலையூர் எல்லைப்பாறை மலை அடிவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் உள்ளது.இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் கற்கள் நிறைந்த கரடு முரடான பாதையை கடந்துதான் வருடந்தோறும் செல்ல வேண்டும். அதன்படி நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 2 ஓட்டுப்பெட்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய பெட்டிகள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 குதிரைகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மலையூரில் ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஆண் வாக்காளர் 237 பேரும், பெண் வாக்காளர்கள் 247 பேரும் மொத்தம் 484 வாக்காளர்களும் உள்ளனர். தேர்தல் பணிக்காக 4 தேர்தல் உதவி அலுவலர்களும், 4 காவல்துறையை சேர்ந்தவர்களும் நடந்தே சென்றுள்ளனர். இங்கு இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களின் போதெல்லாம் ஓட்டுப்பெட்டிகள் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்கள் அனைத்தும் குதிரையில் பாதுகாப்பாக ஏற்றி வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மலைகிராமத்திற்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதுபோலவே நாளை நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் தேர்தல் உபகரணங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மலை கிராமத்திற்கான தேர்தல் பணிக்கு 5 காவல்துறை அதிகாரிகள், தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 8 பேர் குழுவினர் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் சதீஷ் ரங்கநாதன்

Comments
Post a Comment