ஸ்ரீரங்கத்தில் சாலையில்,மீண்டும் ஏற்பட்ட திடீர் மெகா பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் இரண்டாம் நாளாக தொடர்கிறது.திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக நேற்று காலை திடீர் மெகா பள்ளம் ஏற்பட்டது..சாலையின் கீழ் சுமார் 7 அடியில் ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சிமெண்ட்குழாய் உடைந்து சாலையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்தது.அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் அவ் வழியே செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மெகா பள்ளம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்படுகிறது.
உடைந்த குழாயை மாற்றி பள்ளத்தை சீர் செய்யும் பணிகள் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.உடைந்த இந்த குழாய் கடந்த 1977 ம் ஆண்டு பதிக்கப்பட்டது.இது நாள் வரை குழாய்கள் தாக்கு பிடித்ததே அதிசயமாக பார்க்கப்படுகிறது.ஏறத்தாழ 47 ஆண்டுகள் பழமையான இந்த குழாய்கள் ஸ்ரீரங்கத்தை சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு பதிக்கப்பட்டுள்ளது.எனவே இவை அனைத்தையும் அகற்றிவிட்டு இரும்பு குழாய்களை பதித்தால் தான் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என கூறப்படும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து,ஆராய்ந்து வருகின்றனர்.
செய்தியாளர் சங்கரராமன்

Comments
Post a Comment