சென்னை செங்குன்றத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம். காதல் திருமணம் செய்த கணவர் அமிர்தகுமாரும் தூக்கிட்டு தற்கொலை.
சென்னை செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தகுமார். இவர் டிடிஎச் டிஷ் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிவேதா (19) 9மாதங்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள். திருமண நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக அமிர்தகுமாரின் சகோதரி மெர்சி ஞாயிற்றுக்கிழமை இவர்களது வீட்டிற்கு வந்த போது நிறைமாத கர்ப்பிணியான நிவேதா தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நிவேதாவை மீட்டு பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய செங்குன்றம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த முதற்கட்ட விசாரணையில் திருமண நாளான கடந்த ஞாயிறன்று தமது கணவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியும் அதனை மீறி அமிர்தகுமார் வேலைக்கு சென்றதால் மன உளைச்சலில் இருந்த நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மனைவி நிவேதா இருந்த துக்கத்திலிருந்து அமிர்த குமார் கடந்த மூன்று நாட்களாக மிகுந்த மனவிரக்தியுடன் காணப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசாமலும் சரியாக சாப்பிடாமலும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.
இதனை அடுத்து உறவினர்களும் நண்பர்களும் எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவர் அழுத நிலையில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டு வந்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து நேற்று வழக்கம்போல் அவரது உறவினர்களும் நண்பர்களும் அவரவர் இல்லத்திற்கு சென்று விட வீட்டில் அமிர்தகுமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மனவிரட்டியுடன் காணப்பட்ட அமிர்த குமார் தனது மனைவியின் புடவை எடுத்து மின்விசிறியில் தனக்குத்தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்த வழக்கம் போல இன்று காலை நண்பர் ஒருவர் அவரை டீ குடிக்க அழைத்துச் செல்ல அவரது இல்லத்திற்கு வந்தபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து இது குறித்து அவர் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை உடனடியாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்ப்பிணி மனைவி இறந்த இரண்டு நாட்களில் கணவரும் மனவிரத்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் கார்த்திகேயன்

Comments
Post a Comment