Skip to main content

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி,  2-ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் A Grade கபடி போட்டிகள் கடந்த 30-ம் தேதி தொடங்கி, 3 நாட்களாக  நடைபெற்றன.



முன்னதாக, மாநில பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர்  எ.வ. வேலு,  வனத்துறை அமைச்சர் Dr. மா. மதிவேந்தன் ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.  இந்தப் போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 40 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. 

திருச்செங்கோடு உதயா ஸ்போர்ட்ஸ் கிளப், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக, திருச்செங்கோடு ஒன்றிய திமுக ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நள்ளிரவையும் தாண்டி, 03.07.2023  அதிகாலை 2 மணிவரை வரை நடைபெற்றன.  இதன்படி, மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், ஒட்டன்சத்திரம் SMVKC அணியும், கோபி PKR அணியும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 35 க்கு 33 என்ற புள்ளிக் கணக்கில் ஒட்டன்சத்திரம்  SMVKC அணி வெற்றி பெற்றது. இதேபோல ஆடவர் இறுதி போட்டியில் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும் பெங்களூரு கஷ்டம்ஸ் அணியும் களம் கண்டனர். மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்றது  போட்டியில், 49 க்கு 43 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. 

இந்த நிறைவுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற ஆடவர் மற்றும் மகளிர்  அணிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, கோப்பை, 2-ம் பரிசு பெற்ற அணிக்கு தலா  ரூ. 75 ஆயிரம்,  3 & 4-ம் பரிசு பெற்ற அணிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம்,  கால் இறுதியில் தோல்வி அடைந்த  அணிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர், ரைடர், ஆல்ரவுண்டர் என தனித்தனியான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாபெரும் கபடி போட்டிகளை, நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு சுற்றுவட்டார பகுதி கபடி இரசிகர்கள் குடும்பத்துடன் பார்வையிட்டு, வீரர்- வீராங்கனைகளுக்கு உற்சாகமூட்டினர்


செய்தியாளர் முத்தையா 

Comments