மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
மதுரை யாதவா பெண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.44.00 லட்சம் மதிப்பீட்டில் பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு மாநிலத்தை விளையாட்டுத் துறையில் முதன்மை மாநிலமாக மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மிக குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு சர்வதேச நாடுகள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. இது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் நிர்வாகத் திறனுக்கு சான்று.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் நமது மாநில இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலக ஸ்குவாஷ் போட்டி போன்ற சர்வதேச போட்டிகள் சென்னையில் நடத்தப்படுகின்றன. நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற உடன் இந்த ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார்கள்.
மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் இளைஞர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தி பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் இவ்வாண்டு முதன்முதலாக பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் ரூ.25.00 கோடியில் நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டது. முதலில் மாவட்ட அளவில் இப்போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் முதல் பரிசாக தலா ரூ.1,00,000/- மும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.75,000/- பரிசுத் தொகையும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.50,000/- பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் 31.05.2023 தொடங்கி 12.06.2023 வரையில் பல்வேறு பிரிவுகளில் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் eடத்தப்பட்டன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கபாடி, சிலம்பம், தடகளம், கால்யந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து, ஹாக்கி, நீச்சல், கிரிக்கெட் மற்றும் கையுந்துப்பந்து ஆகிய 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், பொதுப்பிரிவினர்களுக்கு கபாடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கிரிக்கெட் மற்றும் கையுந்துப்பந்து ஆகிய 6 வகையான விளையாட்டுப் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு கபாடி, இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து மற்றும் செஸ் ஆகிய 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. மாற்றுத்திறனாளர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கபாடி, எறிபந்து, கையுந்துபந்து ஆகிய 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என முறையே நடத்தப்பட்டன.
மதுரை மாவட்ட அளவில் பள்ளி 3927 மாணவர்களும், 1673 மாணவர்களும், கல்லூரிகள் பிரிவில் 1772 மாணவர்களும், 842 மாணவிகளும், அரசு ஊழியர்கள் பிரிவில் 638 ஆண்களும், 227 பெண்களும், பொதுப்பிரிவில் 836 ஆண்களும், 142 பெண்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 246 ஆண்களும், 100 பெண்களும் ஆக மொத்தம் 10403 பேர் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளார்கள். மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3000/-ம், இரண்டாம் பரிசு தலா ரூ.2000/-ம், மூன்றாம் பரிசு தலா ரூ.1000/-ம் பரிசுத்தொகையாக என மொத்தம் ரூ.44.00 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.
நமது மதுரை மாவட்டம் சார்பாக நீச்சல் போட்டியில் சர்வதேச அளவில் பங்குகொண்ட செல்வன்.விகாஸ் என்ற வினையாட்டு வீரரும், இறகுப்பந்து போட்டியில் சர்வதேச அளவில் வி.எஸ்.வர்ஷினி, அருள்பாலா, ஜெர்லின்அனிகா ஆகிய விளையாட்டு வீராங்கனைகளும், தடகளப் போட்டியில் ஷாம், சௌந்தர்யா, ரதிபாண்டி மற்றும் செல்வி ஆஷா ஆகிய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் பங்குகொண்டு மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கவுள்ளார்கள். பரிசுகள் வென்ற அனைத்து விளையாட்டு வீரர், வீராங்களைகளுக்கும் எனது பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இதேபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜெ.பிரவீன்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல பொது மேலாளர் பியூலா ஜேன் சுசிலா, மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிக்குமார், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம்.ராஜா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா, யாதவா பெண்கள் கல்லூரி தலைவர் அருண் போத்திராஜ் செயலர் இந்திராணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : செந்தில் கணேஷ்

Comments
Post a Comment