அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ வாங்கி, அதனை இயக்கி வருகிறார் இடைநிலை ஆசிரியர் தினகரன்.
பள்ளிக்கு மாணவர்கள் வர காலதாமதம் ஆவதால் தனது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி, மாணவர்களுக்காக இயக்கி வரும் ஆசிரியரின் சேவையை வெகுவாக பாராட்டுகிறார்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த கிராமத்திலிருந்தும், இதற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவதற்கு முடியாமல் போகிறது. இதனால் ஆசிரியர் தினகரன் தனது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி பள்ளி மாணவர்களை குறித்த நேரத்தில் பள்ளியில் கொண்டு வந்து விடுவதும், பள்ளி வேலை நேரம் முடிந்ததும் அவர்களை மீண்டும் பள்ளியிலிருந்து அவர்களது வீடுகளில் கொண்டு போய் விடுவதையும் ஒரு சேவையாக கருதி செய்து வருகிறார். இவரது ஆட்டோ மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஆசிரியர்களை தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் எங்கும் காண்பது அரிது என்று சொல்லலாம். இது போன்ற ஆசிரியர்களை தேர்வு செய்து தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் பாராட்டினால் தகும்.
செய்தியாளர்: வாசுதேவன்

Comments
Post a Comment