டேங்க் ஆப்ரேட்டர் பணி வழங்குவதற்கு ரூபாய் 5 லட்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா ,இடப்பிறை ஊராட்சியில் டேங்க் ஆப்ரேட்டராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் கோவிந்தசாமி. இந்நிலையில் கோவிந்தசாமி உடல் நலக்குறைவால் கடந்த 31. 12 .2022 இல் காலமானார். இதையடுத்து அவரது பணியை அவரது மனைவி பராசக்தி தொடர்ந்து இந்நாள் வரை செய்து வந்தார் .கணவர் இறந்ததால் கருணை அடிப்படையில் இந்த பணி பராசக்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி ஜீவா என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பராசக்திக்கு மாத ஊதியம் தராமல் கிடப்பில் போட்டு விட்டார். இதனால் பராசக்தி நான்கு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் தவிப்புக்கு உள்ளானார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவியை நேரில் சந்தித்து தனக்கு நான்கு மாத சம்பளம் வழங்காமல் உள்ளீர்கள், அதை கொடுத்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்று கேட்டுள்ளார் . அதற்கு ஊராட்சி மன்றத் தலைவி ஜீவா டேங்க் ஆப்ரேட்டர் பணி வழங்க வேண்டும் என்றால் எனக்கு நீ ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால் வேறு நபருக்கு பணியை போட்டுக் கொடுத்து விடுவேன் என்று பராசக்தியை மிரட்டி உள்ளார். இதையடுத்து கணவரை இழந்த நிலையில் குடும்பத்தை நடத்த முடியாமல் தடுமாறி, வறுமையில் உழன்று கொண்டு இருந்தார் பராசக்தி. இந்நிலையில் மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவி ஜீவாவை சந்தித்தார் பராசக்தி. அப்போது வேண்டும் என்றால் ரூபாய் ஐம்பதாயிரம் குறைத்துக் கொண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கவும். வெறுங்கையால் வந்து என்னை இனி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் என்று கறாராக கூறியுள்ளார். இல்லையென்றால் ரூபாய் 25 ஆயிரத்தையாவது முதலில் எனக்கு முன் தொகையாக கொடுங்கள். அப்போதுதான் நான் இந்த பணி ஆணையை வேறு யாருக்கும் வழங்க மாட்டேன் என்று சொல்லி உள்ளார். இதையடுத்து பராசக்தி தனது சகோதரர் ராஜனிடம் தகவலைச் சொல்லி ஒப்பாரி வைத்துள்ளார். இதையடுத்து பராசக்தியின் சகோதரர் ராஜன் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகனை சந்தித்து ஊராட்சி மன்ற தலைவி ஜீவா தனது சகோதரியிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கருணை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் கூறி முறையிட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் போளூர் ஒன்றியம் ,இடைப்பிறை கிராம ஊராட்சிக்கு ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவிடம் ரூபாய் 25 ஆயிரம் கொடுக்குமாறு பணத்தை கொடுத்து அனுப்பினார். பராசக்தியும் அந்த பணத்தை கொண்டு சென்று ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவிடம் கொடுத்தார். இதையடுத்து அருகில் மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர்கள் ஹேமா மாலினி ,மைதிலி மற்றும் உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், கோபிநாத், கமலக்கண்ணன் ,முருகன், சரவணன், ரஜினி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜீவாவை கைது செய்தனர் .இதைத் தொடர்ந்து போளூர் பிடிஓ அலுவலகத்தில் விசாரணை நடத்திவிட்டு ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவை வேலூரில் உள்ள மத்திய பெண்கள் தனிச்சிறையில் காவலில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: வாசுதேவன்

Comments
Post a Comment