பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருவதை வரவேற்கும் வகையில், தமிழகத்தில் விரைவில் நடத்தப்பட உள்ள நன்றி மோடி ஜி என்ற பிரம்மாண்டமான விவசாயிகள் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ள உள்ளார் என்று பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் ஜி. கே. நாகராஜ் தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொஞ்சனூர் என்ற பகுதியில் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில், மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம் (31.3.23- மாலை) நடைபெற்றது.
இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் ஏ.கே. நடராஜன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் அங்கு அமைக்கப்பட்டு இருந்த விவசாயிகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாவட்ட விவசாய அணி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டமானது வரைவு திட்டம் தயார் செய்த நிலையில் உள்ளது. இதனை மாநில அரசு உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்., திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்., வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்., கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ததுபோல மஞ்சள் மற்றும் மரவள்ளி பயிர்களுக்கும் மாநில அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்., காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும்., நாட்டு சர்க்கரையுடன் கலப்படம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்., வெளிநாட்டில் இருந்து அதிக விலை கொடுத்து பாமாயில் வாங்கி, ரேஷன் கடைகளில் வழங்குவதை கைவிட்டு, நமது உள்ளூரில் விளையும் தேங்காய்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்., காவிரி-திருமணிமுத் தாறு இணைக்க மாவட்ட அளவில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர்,
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளில் நலம் கருதி நெல் கொள்முதலுக்காக ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவில்லை. குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களை, தங்களது திட்டம் போல திமுகவினர் காட்டிக் கொள்கின்றனர். அதில் பல்வேறு ஊழல்களும் நடைபெறுகின்றன. இதுகுறித்த புகார்களும் வந்த வண்ணம் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திமுகவினர் தலையீடு செய்து அந்த நிலையத்தையே கைப்பற்றி நெல் கொள்முதலில் ஊழல் செய்து வருகின்றனர். 45 கிலோ மூட்டைக்கு 60 ரூபாய் வரை கமிஷன் பெறுகின்றனர். விவசாயிகளிடம் 2,150 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு நெல்லை பெற்று, இடைத்தரகர்கள் உதவியுடன் அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதனை பாஜக கண்டிக்கிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அறிவிக்கப்பட்ட கோதாவரி-குண்டாறு இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின் போது இதுகுறித்து விவசாய அணிகள் சார்பில் வலியுறுத்த உள்ளோம். பாஜக தமிழ்நாடு விவசாய அணியின் 66 மாவட்டங்களிலும் இதுகுறித்த தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், அவர்கள் பல்வேறு திட்டங்களில் பயன் பெறுவதற்காகவும் மத்திய அமைச்சர்கள் பலரும் விரைவில் தமிழகத்திற்கு நேரில் வந்து, விவசாயிகளை சந்திக்க உள்ளனர். இதன்மூலம் தமிழகத்து விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாஜக மாநில விவசாய அணி சார்பில், தமிழ்நாட்டில் விரைவில் நன்றி மோடி ஜி என்ற பிரமாண்டமான விவசாயிகள் மாநாடு நடத்தப்பட உள்ளது. அதில் பிரதமர் பங்கேற்க உள்ளார் என்றும் மாநில பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே. நாகராஜ் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர் பாஜக தேசிய கட்சியாக இருந்த போதிலும் அந்தந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காவிரி நீர் பங்கீடு பொருத்தவரையில் கர்நாடகாவிலும் தமிழகத்திலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வந்ததால் தற்போது காவிரியில் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரத்திலும் அவ்வாறு இரு மாநில நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படும்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் பிஜேபி செய்த சாதனைகளில் ஒரு சதவீதம்கூட காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் செய்யவில்லை. இதனால் தற்பொழுது காங்கிரஸ் ஆட்சி பொதுமக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டது. நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலும் பிஜேபி ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ளது. 33 ஆண்டுகளாக தொடர்ந்து குஜராத்தில் பாஜக நீடிக்கிறது. அங்கு காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. காரணம் காங்கிரஸ் பிரிவினைவாத அரசியல் செய்கிறது. கர்நாடகாவில் தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நாமக்கல் மேற்கு மாவட்ட விவசாய அணி பார்வையாளருமான ஆர். அருணாச்சலம், மல்லசமுத்திரம் ஒன்றிய பாஜக விவசாய அணி தலைவர் கே. துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள், விவசாயிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
நாமக்கல் செய்தியாளர் : முத்தையா

Comments
Post a Comment