வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்தைச் சேர்ந்தது லத்தேரி காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக விஸ்வநாதன் பணியாற்றி வந்தார். இவருடன் ரங்கநாதன், பாஸ்கரன் மற்றும் போலீசார் இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த பால்காரர் நாகேஷ் என்பவரது கொலை வழக்கில் சரியாக துப்பு துலக்கவில்லை என்பதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களிடம் கணிவாக நடக்காமல் செயல்பட்டதாகவும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. அப்பொழுதும் எஸ்.பி., அலுவலகம் வாயிலாக பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மௌனம் காத்து வந்தனர் லத்தேரி போலீசார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் லத்தேரி காவல் நிலையத்தை உன்னிப்பாக கவனித்து வந்தது. கடந்த 5ம் தேதி லத்தேரியில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றும் அரங்கேறியது . கொலை வழக்கில் குற்றவாளிகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ரௌடிகளுடன் இணக்கமான சூழலில் காவல் நிலையம் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து லத்தேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தலை முதல் வால் வரை களையெடுத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். இதற்காக அனைவரையும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவும் பிறப்பித்தார் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள். ஆனால் லத்தேரி காவல் நிலையத்தில் நாரோடு சேர்ந்த பூவும் நாற்றமெடுக்க ஆரம்பித்தது. இதன் விளைவு அதிரடி இடமாற்றம். சொம்பு பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுவதும் விஷமாக மாறிவிடும் என்று சொல்வார்கள். அதுபோல காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் குற்றவாளிகளுடன் நெருங்கி நெருக்கம் காட்டியதால் அனைவரையும் அதிரடியாக இடமாற்றம் செய்து காவல் துறையில் கருப்பு ஆடுகளுக்கு இடமில்லை. கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு என்று பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே காவல் துறையில் முதலிடம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற காவல்துறை அதிகாரிகள் காவல்துறையில் இருப்பதுதான் இன்றும் காவல்துறை மிடுக்காக இருக்கிறது .இது தமிழக காவல் துறையில் ஒரு மகுடம் சூட்டும் நிகழ்வு என்றும் இதை குறிப்பிடலாம். இதுபோன்ற காவல் கண்காணிப்பாளரை காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அழைத்து பாராட்டினால் கூட தகும் என்கின்றனர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

Comments
Post a Comment