மாதவரத்தில் நடந்து சென்ற ஆசாமியிடம் செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மாதவரம் சின்ன ரவுண்டானா மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே நடந்து சென்ற மாதவரம் உடையார் தோட்டத்தை சேர்ந்த பிரவீன் (வயது 30) என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். இதனை கண்ட அருகிலுள்ள நபர் ஒருவர் உடனே இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு தீவிரமாக மர்மநபர்களை தேடி வந்த நிலையில் மஞ்சம்பாக்கம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாதவரம் உடையார் தோட்டத்தை சேர்ந்த மோனிஷ் (வயது 22 ) புழல் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் (வயது 20) ஆகியோர் அவரது நண்பரிடம் இருசக்கர வாகனத்தை இரவலாக வாங்கிக் கொண்டு வழியில் நடந்து சென்ற வடநாட்டு ஆசாமியிடம் செல்போன் பறித்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் இவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து இவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரின் மீது மாதவரம் புழல் ஆகிய காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
செய்தியாளர்: அகமது அலி
.jpg)

Comments
Post a Comment