அரூரில் எச்.ஈச்சம்பாடி ஊராட்சி பள்ளியின் சுற்றுச்சுவரில் அம்பேத்கருடைய படத்தை வரையாததால் விசிக கட்சியினர் சாலை மறியல்..!
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எச்.ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சுற்றுச்சுவரில் வரலாற்று சரித்திரம் படைத்த எழுத்தாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டோரின் திருவுருவ படங்களை ஓவியங்களாக வரைந்துள்ளனர். அப்போது அருகே இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவத்தை சுற்று சுவரில் ஓவியமாக ஏன் வரையவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி செயலாளர் மணிவேல் அம்பேத்கருடைய படத்தை வரைய முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனை கண்டிக்கும் வகையில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் சாதி தலைவர் அல்ல, அவர் தாழ்த்தப்பட்டோர் மக்களுக்காக மட்டும் சட்டங்களை எழுதவில்லை, அனைவருக்குமான சட்டத்தை இயற்றியவர், எனவே அவருடைய படத்தை ஓவியமாக வரைய மறுத்த ஊராட்சி செயலாளர் மணிவேல் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், சுற்று சுவரில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்தை வரைய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பெனாசிர் பாத்திமா தலைமையிலான காவல்துறையினர் அவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பின்பு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் சேலம் - திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1:30 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு, சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பேருந்து பயணிகள் சிரமப்பட்டனர்.
செய்தியாளர்: மோகன்ராஜ்

Comments
Post a Comment