Skip to main content

மாதவரத்தில் இஸ்லாமிய பள்ளியில் குழந்தைகள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்த இருவர் போலீசாரால் கைது..!

 சென்னையடுத்த மாதவரம் பொன்னியம்மன் மேடு அய்யர் தோட்டம் பகுதியில் அரபி மதரஸா இஸ்லாமிய பள்ளி இயங்கி வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த நசீர் என்பவர் கொடுங்கையூரை சேர்ந்த அக்தர் (வயது 26) என்பவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் வாடகைக்கு விட்டுள்ளார்.




இந்த இஸ்லாமிய பள்ளியில் பீகாரை சேர்ந்த அப்துல்லா (வயது 20) என்பவர் பிள்ளைகளுக்கு பாடம் நடத்திவரும் ஆசிரியராக இருந்து வருகிறார். இப்பள்ளியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 வயது முதல் 12 வயதுள்ள ஆண் சிறுவர்கள் 12 பேர் இஸ்லாமிய பாடம் கற்க இங்கேயே தங்கி பாடங்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சைல்டு ஹெல்த் கேர் பள்ளியில் சிறுவர்களின் அபயக்குரல் கேட்பதாக ரகசிய தகவல் வந்ததின் பேரில், கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜாராமுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசாருடன் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டபோது , அங்கு சிறுவர்கள் பயத்தில் இருந்தது தெரிந்தது . பின் அவர்களை பார்த்தபோது முகம், கை, கால், முதுகு பின்மறைவிட பகுதிகளில் அடித்து தழும்புகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் முதலில் அவர்களுக்கு முதல் உதவி அளித்து அரசு சிறுவர்கள் மருத்துவமனைக்கு 12 பேரையும் அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பீகாரில் இருந்து இங்கு இஸ்லாமிய மார்க்க கல்வி பெற சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக இங்கேயே தங்கவைத்து அவர்கள் பெற்றோர்களிடம் மாத மாதம் பணம் பெறுவார்கள் என தெரியவந்தது.

இப்படியாக  சிறுவர்களை சேர்த்து அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவர்களுக்கு பாடம் புரியாமல் திகைக்கும் போது அவர்களை கம்பாலும் ஒயரினாலும் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வருகிறது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான தழும்புகள்  உள்ளதால் அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் மருத்துவமனையில் காவல் இணை ஆணையாளர் ராஜேஸ்வரி மற்றும் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜாராம் குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் வழக்கு பதிவு செய்து சிறுவர்களின் இந்த நிலைமைக்கு காரணமான  உரிமையாளர் அக்தர், ஆசிரியர் அப்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.


செய்தியாளர்: அகமது அலி 

Comments