திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் சித்தீக் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக மாரியப்பன் (வயது 52) என்பவர் வாடகைக்கு எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.இந்த கடைக்கு முன்வைப்பு தொகையாக 82 லட்சம் ரூபாய் முன்தொகையாக மாரியப்பன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்டிட உரிமையாளர் சித்தீக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு ஒருவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்துள்ளார். புதியதாக இடத்தை வாங்கிய நபர் கடையை காலி செய்ய மாரியப்பனிடம் கூறியபோது அதற்கு அவர் இந்த கடைக்கு நான் முன்பணமாக கொடுத்த தொகையை திருப்பி செலுத்தினால் கடையை காலி செய்து விடுகிறேன் எனக்கூறியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக மாரியப்பன் தமது முன்னாள் கட்டிட உரிமையாளர் சித்தீக் என்பவரிடம் பணத்தை பெற்றுதர வழக்கறிஞர் செங்குன்றத்தை சேர்ந்த நந்தகோபாலன் என்பவரை அணுகி உதவி கேட்டு பின்னர் வழக்கு செலவுக்காக 2.5 லட்ச ரூபாய் வழக்கறிஞருக்கு கொடுத்துள்ளார்.அதன் பின்னர் சமரச பேச்சு வார்த்தையின் மூலம் கட்டிட உரிமையாளர் 54 லட்ச ரூபாயை திருப்பி கொடுப்பதாக ஒப்புக்கொண்டார் . இந்த செய்தியை மாரியப்பனிடம் வழக்கறிஞர் நந்தகோபாலன் கூறி அந்த தொகையை மாரியப்பன் வங்கி கணக்கில் செலுத்தினால் வருமானவரி கட்டவேண்டும் என காரணம் காட்டி தமது மனைவி சாந்தகுமாரியின் வங்கி கணக்கில் பணம் பெற்று கொண்டுள்ளார். அதன் பிறகு 10 லட்ச ரூபாய் மட்டுமே மாரியப்பனுக்கு கொடுத்த வழக்கறிஞர் நந்தகோபாலன் எஞ்சிய 44லட்ச ரூபாயை கொடுக்க காரணங்கள் சொல்லி காலங்கள் கடத்தி ஏமாற்றி வந்தார்.இதனால் பொறுமையிழந்த மாரியப்பன் வழக்கறிஞர் நந்தகோபாலன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் நந்தகோபால் மற்றும் அவரது மனைவி சாந்திகுமாரி ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.பின்னர் கணவன் மனைவி இருவரையும் கைது செய்த செங்குன்றம் போலீசார் இவர்கள் மீது நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.நியாயம் பெற்றுத்தர நியமிக்கப்பட்ட வழக்கறிஞரே இதுபோல் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment