திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அழகாபுரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்றிரவு இங்கு புகுந்த மர்மநபர்கள் தரைப்பகுதியை சேதப்படுத்தி எந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். தரையை இடித்து எந்திரத்தை எடுக்க முடியாததால் முயற்சியை கைவிட்டு திருடர்கள் தப்பியுள்ளனர். இதனால் பணம் பறிபோவது தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் அந்தப் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம் அமைந்துள்ள இடத்தில் கைரேகை மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடையங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment