செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், கொருக்கந்தாங்கல், லட்சுமிபுரம், பலராமபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்கள் குடியிருக்கும் வீடுகளை இடிக்க கூடாது என்று கூறி ஏற்கனவே கடந்த இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், மூன்று தலைமுறைக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் லட்சுமிபுரத்தில் குடியிருந்து வருகின்றோம். ஆனால் நாங்கள் இருப்பது குடியிருப்பு என்பதை மறைத்து வருவாய்த்துறையினர் கொடுத்த பொய்யான தகவலின் பேரில், அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது.
இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இதில் வழக்கு நிலுவையில் உள்ளதை கூட பார்க்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் எங்களது வீடுகளை இடிப்பதற்காக பலமுறை தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றனர். அப்பகுதிகளில் உள்ள வீடுகளை இடிப்பதற்காக வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரங்களை எடுத்துகொண்டு வந்தனர். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து லட்சுமிபுரம் பிரதான சாலையில் ஆங்காங்கே பந்தல் போட்டு சாலையில் அமர்ந்து மூன்றாவது முறையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி வீடுகளை இடிக்க வந்தால் கூடுவாஞ்சேரி ஜி எஸ் டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் பொது மக்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொக்லைன் இயந்திரங்களை எடுத்துகொண்டு வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர். மேலும் இதுகுறித்து கிராம கணக்கில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஆதனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரத்தை 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, எந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக மக்கள் குடியிருக்கும் வீடுகளை இடிக்க வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்: துஷால்


Comments
Post a Comment