சென்னை அடுத்த மாதவரம், புழல், மணலி ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக மாதவரம் காவல் நிலைய தனிப்படை உதவி ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வாகனங்களை திருடும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகில் நின்றுகொண்டிருந்த தேடப்பட்டு வரும் நபரான வியாசர்பாடி பாரதிநகரை சேர்ந்த விக்ரம்( வயது 37 ) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் கொடுத்த தகவலில் இருசக்கர வாகனங்களை திருடி அதனை புதுப்பேட்டையில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து விற்று விடுவதாக கூறியதின் பேரில், புதுப்பேட்டையை சேர்ந்த குலா மொய்தீன் ( வயது 50 ) ஷேக் முகமது (வயது 28) ஆகிய இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் இருசக்கர வாகனத்தை திருடி தங்களிடம் கொடுத்து, அதற்கு விலை நிர்ணயம் செய்து பணம் வாங்கி செல்வது தெரியவந்தது.
இவர்கள் இதுபோல வாங்கிய வாகனங்களை உதிரியாக பிரித்து விற்பனை செய்யதாக சொல்லப்படுகிறது. மேலும் விக்ரம் இதில் கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் மூவரின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: அகமது அலி


Comments
Post a Comment