திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மத்திராவேடு கிராமத்தில் அருள்மிகு ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 19ஆம் ஆண்டு புரட்டாசி மூன்றாவது வார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கடந்த ஞாயிறன்று காப்பு கட்டலுடன் பந்தக்கால் நடப்பட்டு கிராம தேவதைக்கு பொங்கலிடப்பட்டு புரட்டாசி திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஏழு நாட்களாக வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் இன்று உச்சகட்ட திருவிழா நடைபெற்றது.
ராதா ருக்மணி சகிதமாக வேணுகோபால சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சர்க்கரை பொங்கல், பழவகைகளுடன் சுமார் 5 கிலோ அளவுள்ள லட்டு உள்ளிட்ட இனிப்பு பலகாரங்கள் சுவாமிக்கு படையலிடப்பட்டிருந்தது.
வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.இதையடுத்து கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் மேளதாளம் முழங்க வேணுகோபால சுவாமியை போற்றி பக்தர்கள் பஜனை பாடியபடி முன்னே செல்ல வான வேடிக்கையுடன் எம்பெருமான் கிராமம் முழுவதும் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கிராம மக்கள் வீடுதோறும் மாக்கோலமிட்டு சுவாமிக்கு பட்டு அங்கவஸ்திரம் அணிவித்து பக்தியுடன் வணங்கி சென்றனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment