சென்னை, கொளத்தூர் பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கார் ஓட்டுனராக வேலை செய்கிறார். அவரது மனைவி ஜெயப்பிரதா, அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் தீபக் ( வயது 13) அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய தீபக்கிற்கு திடீரென காய்ச்சல் வந்ததால், அவரது பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பள்ளி செல்ல தீபக்கை எழுப்பியபோது படுக்கையில் அசைவின்றி இருந்துள்ளார். தொடர்ந்து எழுப்பியபோதும் மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனே அருகிலுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்து அழுது புலம்பினர்.இச்சம்பவம் பற்றி கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபக்கின் உடலை கைப்பற்றி அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார் மாணவரின் இறப்புக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment