திண்டுக்கல் அருகே மர்மமான முறையில் மயில்கள் பலியானது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ரெங்கமலை மற்றும் ஆர்.கோம்பை அருகே உள்ள தொப்பையசாமி மலைப்பகுதியில் அதிகமான மயில்கள் இரைதேடி மலைப்பகுதிக்கு கீழே உள்ள விவசாய நிலங்களுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் வேடசந்தூர் - கோவிலூர் சாலையில் துருவத்துப்பட்டியில் சாலையோர காட்டுப்பகுதியல் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மயில் ஒன்று உடலில் காயங்கள் இன்றி இறந்து கிடந்தது.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் அய்யலூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மயிலை மீட்டு அய்யலூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவரைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். விவசாய நிலத்திற்குள் புகுந்து தொந்தரவு செய்ததால் யாராவது மயிலுக்கு விஷம் வைத்தனரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment