சென்னை, அண்ணாநகரை சேர்ந்த நவநீத் என்பவருக்கு சொந்தமான புழல் காவாங்கரை மாரியம்மாள் நகரில் நான்கரை ஏக்கர் நிலத்தில் வீட்டுமனைகள் அமைத்து, அதனை விற்பனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் காவாங்கரையை சேர்ந்த அமர்நாத் ( வயது 39) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று புழல் பகுதியில் வசிக்கும் 23 வது வார்டு பி.ஜே.பி பிரமுகர் வெங்கடேசன் ( வயது 51) அவருடைய நண்பர் அதே பகுதி வட்ட செயலாளர் ஏழுமலை (வயது 55) ஆகியோர்கள் நிலத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளரிடம் சென்று நீங்கள் வீட்டுமனை அமைப்பதற்கு, இது பாதை என காரணம் காட்டி இதில் மனைபிரிவு அமைத்தால் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் எனவும், எனவே அதனை சரிசெய்ய பணம் கொடுக்க வேண்டும் என அவர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதற்கு நிலத்தின் உரிமையாளர் செவிசாய்காததால் கட்சி பிரமுகர்கள் மாரியம்மன் நகர் நாலாவது குறுக்கு தெருவில் செல்லும் வழியின் குறுக்கே ஒரு கம்பத்தை நட்டி வைத்து, அதில் பி.ஜே.பி கொடியை ஏற்றி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலாளர் அமர்நாத் புழல் காவல் நிலையத்தில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். புழல் காவல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கட்சி கொடிகளை அகற்ற கூறி சம்பந்தப்பட்ட பிஜேபி பிரமுகர்களை காவல் நிலையம் அழைத்து வந்து ஆவணங்களை காட்டி விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதன் காரணமாக வெங்கடேசன், ஏழுமலை ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மேல் நில அபகரிப்பு மற்றும் மிரட்டி பணம் வாங்குதல் போன்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments
Post a Comment