தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 3 மாதத்திற்கு முன்பு முதல் போக சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து பெரியார் பிரதான கால்வாயில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அணைப்பட்டி, விளாம்பட்டி, ராமநாதபுரம், வட்டப்பாறை பகுதிகளில் விவசாயிகள் நெல் முதல் போக சாகுபடி செய்தனர்.
தற்போது அறுவடை செய்த நெல் மணிகளை விளாம்பட்டியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்பு வெட்டவெளியில் திறந்த நிலையில் கொட்டி வைத்துள்ளனர். கடந்த 2 தினங்களாக நிலக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் நெல் மணிகள் நனைந்தது. இருப்பினும் ஆங்காங்கே தார்ப்பாய் போட்டு விவசாயிகள் மூடி வைத்துள்ளனர். அதிக அளவு மழை நீடித்தால் நெல்மணிகள் முளைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுபோன்ற பாதிப்பில் இருந்து மீள விவசாயிகள் விளாம்பட்டியில் நெல் மணிகளை பாதுகாப்பாக வைக்க கிட்டங்கி கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment